Sunday, January 9, 2022

Iyarkai manjal இயற்கை மஞ்சள்

மஞ்சள் என்றாலே , அதிகம் செலவு  செய்யவேண்டிய விவசாயம் என்று பரவலாக எங்கள் ஊர் விவசாயிகள் சொல்வதுண்டு.

முக்கிய காரணம் களையெடுக்கும் செலவு, நீர்பாய்ச்சும் செலவு , அதற்க்கு தேவையான தொழு உரம் போன்றவை, விதை மஞ்சள் வாங்கவேண்டி இருந்தால்  அந்த செலவு , மற்ற பொதுவான செலவுகள் உழவு , குப்பை வைத்தல் மற்றும் , நோய் கட்டுப்பாடு போன்ற செலவுகள்.  


ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு 

1) உழவு 5000/=

2) விதை மஞ்சுள் 700 கிலோ x ரூ 30/= =21000/-

3) தொழு உரம் 10 லோடு ட்ராக்ட்டர் x  ரூ =2500/- =Rs.25000/=

4) பார்பிடித்தல் Rs 5000/=

5) விதை மஞ்சள் ஊன்றுதல் Rs. 7000/=

6) 7 முறை களை எடுப்பதிற்கு x Rs.3000/= = 21000/=

7) 70வது முறை நீர் பாய்ச்சுவதற்கு x  Rs.500  = Rs.35000/= 

(சுமாராக நான்கு நாட்களுக்கு ஒரு முறை )

8) மஞ்சள் வெட்டுவதுற்கு Rs.45000/=

9) இயற்கை உயிர் உரங்கள் Rs.6000/=

மொத்த செலவு Rs.170000/=

(Rs.5000+Rs.21000+Rs.25000+Rs.5000+Rs.7000+Rs.21000+Rs.35000+Rs.45000)


விளைச்சல் 









Thursday, December 27, 2018

பாரம்பரிய நெல் சாகுபடி - Traditional Paddy Variety Cultivation - கிச்சலி சம்பா, மாப்பிளை சம்பா ,கருப்பு கவுனி, ஜீரக சம்பா,கொத்துமல்லி சம்பா,நவரா, சோனா மசூரி - Kitchali Samba,Sorna Masoori,Karuppu Kavni, Jeeraga Samaba,Kothamalli Samba,Navara,Sorna Masuri


பவானிசாகர் அணையின் வாய்க்கால் பாசனத்தில் முதல் முறையாக 8,5 Acre பரப்பளவில் இயற்க்கை முறையில் பாரம்பரிய நெல் பயிரிட்டுள்ளோம்.    கிச்சலி சம்பா மற்றும் சொர்ண மசூரி  இரண்டு வகைகளையும் அதிக அளவில் பயிரிட்டுள்ளோம். இவைகளுடன் வேறு நெல் வகைகளையும் குறைந்த பரப்பளவில் பயிர் செய்ய்துள்ளோம். 

பயிரிட்ட நெல் வகைகள


கிச்சலி சம்பா Kichili Samba 3.5 Acre

சோனா  மசூரி Sona Masuri 3.0 Acre
 
கருப்பு கவுனி Karuppu Kavni 40 Cents

மாப்பிளை சம்பா Mappilai Samba as Inter crop in Banana 1 Acre

ஜீரக சம்பா   Jeeraga Samaba 30 Cents
கொத்துமல்லி சம்பா Kothamalli Samba  (5 cents)

நவரா Navara (2 cents)









இயற்கை விவசாயம் பற்றிய சில முக்கியமான தகவல்கள் , இடுபொருள்கள் பற்றிய தகவல்களை இயற்கை விவசாயம் பற்றிய அனுபவம் உள்ளவர்கள், youtube போன்றவைகளை பயன்படுத்தி ஓரளவுக்கு அறிந்து இருந்தோம்.  முக்கியமாக சத்து குறைந்த (Low Fertile) மண்ணில்  எப்படி பயிர் வளர்ச்சிக்கு தேவையான இயற்க்கை உரங்களை பயன்படுத்துவது என்பது முக்கிய தேடலாக இருந்தது

சில நிலங்களில், வயல்களை  சீரமைத்து வரப்புகளை மாற்றி அமைக்கபட்டிருந்ததால் சத்துக்கள் குறைவான மண்ணாக(Low fertile ) மாறி இருந்தது.  


எங்களின் தேடலில் மிக முக்கியனவகைகளாக  அறிந்த இயற்கை உரங்கள்:
  1. பசுந்தாள் உரம்,
  2. பல தானிய  பயிர் உரம் ,
  3. ஊட்டம் ஏற்றிய தொழு உரம்,
  4. மீன் அமிலம்,
  5. அமிர்த கரைசல்,
  6. ஜீவாமிர்தம்,
  7. தே மோர் கரைசல்,
  8. உயிர் உரங்கள்,
  9. அசோலா,
  10. EM பயன்பாடு
இவைகள் நெல் பயிரில் இயற்க்கை விவசாயத்திற்கு எவ்வளவு பயனுள்ளதாக  இருக்கும் என்பதையும் ,பயிர்களுக்கு இடும்  முறைகளையும் தெரிந்து கொள்வது அவசியமாக இருந்தது.


இடுபொருள்  மற்றும்  உர மேலாண்மை  கீழ்கண்ட வகைகளில் செய்தோம் :
  1. பசுந்தாள் உரதிற்கு  தக்கை பூண்டு , பலதானிய பயிர்களை  உழவில் மடக்கி உழவு செய்யப்பட்டது. 
  2. ஊட்டம் ஏற்றிய தொழு உரம் 
    1. அடியுரமாக 100 கிலோ  per Acre.
    2. மேல் உரமாக 100 கிலோ per Acre.
    3. நடவு செய்த 20ஆம் நாள்  100 கிலோ  per Acre..
  3. கோனோ வீடர் மூலம் உளவு 20 முதல் 30 நாட்களுக்குள் ஒரு முறை.
  4. புண்ணாக்கு ஊட்டம் (தொழு உரம்,உயிர் உரம்   மற்றும் புண்ணாக்கு பயன்படுத்தி ஊட்டம் ஏற்றியது)
    1. நடவு செய்த  40ஆம் நாள்  250 கிலோ   per Acre.
    2. நடவு செய்த  60ஆம் நாள் மீண்டும்  250 கிலோ   per Acre.
  5. ஜீவாமிர்தம் தெளிப்பு 
    1. 20ஆம் நாள் மற்றும் 40ஆம் நாள் ஜீவாமிர்தம் மற்றும் வேப்பண்ணெய் கலவை தெளிப்பு .
  6. மீன் அமிலம் மற்றும் வேப்பண்ணெய் கலவை  தெளிப்பு 
    1. 15ஆம் நாள்,30ஆம் நாள் மற்றும் 45ஆம் நாள் .
  7. ஜீவாமிர்தம் 
    1. வாரம் ஒருமுறை ஜீவாமிர்தம் 45 நாட்கள் வரை நிலத்தில் நீர்  பாய்ச்சும்போது கலந்து விடப்பட்டது.
  8. அமிர்த கரைசல் 
    1. வாரம் ஒரு முறை அமிர்த கரைசல் 45 நாட்களுக்கு பிறகு, நிலத்தில் நீர்  பாய்ச்சும்போது கலந்து விடப்பட்டது.
  9. EM கரைசல் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை . நிலத்தில் நீர்  பாய்ச்சும்போது கலந்து விடப்பட்டது.
  10. தேமோர் கரைசல் 
    1. 70ஆம் நாள்,மற்றும் 80ஆம்  நாள் தேமோர் கரைசல் தெளிக்கப்பட்து.

நோய் தாக்குதல் அறவே இல்லை என்பதால் எந்த வகையான பூச்சி விரட்டி அல்லது மருந்துகளும் பயன்படுத்தவில்லை.

உங்கள் மண்ணின் சத்து  தன்மை மற்றும் நீரின் தன்மையை  பொறுத்து நீங்கள் இயற்கை இடுபொருட்கள் மற்றும் உரங்களை  தேவையான நேரங்களில்   கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.


நெல் வயலுடன் முதல் பயணம்

நெல் விவசாயத்தில் விவசாய நிலங்களை தயார் செய்வது, நாற்றங்கால் தயார் செய்வது, நடவு செய்வது, சரியான தருணத்தில் களை நிர்வாகம், உர மேம்பாடு  செய்யவேண்டிது போன்ற காலங்கள் மற்றும் நிலைகள் மிக முக்கியம்.


சணப்பு/தக்கைப்பூண்டு,
3.5 Acre பரப்பளவில் நிலத்தை தயார் செய்வதற்கு தக்கை பூண்டு விதைத்தோம்.  இயற்கை வேளாண்மைக்கு இது முக்கியம். இவைகளை 45 ஆவது நாள் மடக்கி உழுது மண்ணில் கலக்கும் பொழுது,  தழை சத்துகள் அதிகம் கிடைக்கும்.  மண்ணில் பயிரிடப்போகும் நெல் பயிருக்கு பயனுள்ளதாக இருக்கும்.



பலதானிய பயிர்கள்
2 Acre நில பரப்பளவில் பலதானிய பயிர்கள் விதைத்தோம். மற்ற நிலங்களில் வேறு பயிர்கள் இருந்ததால் எதுவும் விதைக்க முடியவில்லை. மழை தொடரும் என்ற எதிர்பார்ப்புடன் இவைகளை விதைத்திருந்தோம் .





 எதிர்பார்த்த அளவு மழை இல்லை என்பதால் , தக்கை பூண்டு , பல தானியங்கள் வளர்ச்சி ஓரளவு இருந்தது. பலதானியங்கள் என்பது என்னை வித்து பயிர்கள்பயிறு வகை பயிர்கள் , தானிய பயிர்கள் ,சிறுதானிய பயிர்கள், வாசனை பயிர்கள்பசுந்தழை உர பயிர்கள், பருப்பு வகை பயிர்கள் ,காய்கறி பயிறுகள் இவைகள் கலந்த கலவை. 


இதுபோன்ற பயிர்களை  நெல் நடவுக்கு முன் விளைவித்தால், உளவில் மடக்கி உழுதல் மூலம் மண்ணில் பயிர்களுக்கு தேவையான சத்துக்கள் சேரும்

அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியா  போன்ற உயிர் உரங்களை மண்ணில் சேர்க்கும் பொழுதுதழை,மணி,சாம்பல்  சத்துக்களை பயிருக்கு எடுத்து கொடுக்கும். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது போல், இவைகள் இல்லாமல் நுண்ணியிர்களுக்காக்க செலவு செய்து ,நுண்ணியிர்களை மண்ணில் தெளித்தால் பயன் அவ்வளவு இருக்காது.


பலதானியங்களில் சில    
என்னை வித்து பயிர்கள் (எள்வேர் கடலைஆமணக்குசூரியகாந்தி)
பயிறு வகை பயிர்கள் (நரி பயிர், கொள்ளு)
தானிய பயிர்கள் ( வெள்ளை சோளம் , மக்கா சோளம் )
சிறுதானிய பயிர்கள் (கம்புராகி ,வரகுதினை,சாமை)
வாசனை பயிர்கள் (கொத்தமல்லி,சீரகம்,வெந்தயம்)
பசுந்தாள் உர பயிர்கள் (தக்கை பூண்டுசணப்பு )
பருப்பு வகை பயிர்கள் (தட்டை பயிர்,பச்சை பயிர்,உளுந்துதுவரை)
காய்கறி பயிறுகள் (கொத்தவரை,செடி அவரை)

இந்த ஒவ்வொரு வகைகளிலும்  எதவு ஒன்றில் அல்லது அதற்கு மேல் 2 கிலோ வீதம் கலந்த விதை கலவைகளை ஏக்கருக்கு 20 கிலோ  வீதம் விதைத்தோம்.
  
ஊட்டம் ஏற்றிய தொழு உரம் 
ஐந்து லோடு(டிராக்டர்) ஆடு ,மாடு  சாணங்கள் கலங்கிய  மக்கிய தொழு உரம் , இவற்றுடன்  உயிர் உரங்களை வைத்து ஊட்டம் ஏற்றிய தொழு உரம் செய்து இருந்தோம்

உயிர் உரங்களை , தொழு உரத்தில் கலந்து வாரம் ஒருமுறை கலக்கி விட்டால் இரண்டு மாதத்தில் பொடிபோல்  ஆகிவிடும் மேலும்  சத்துக்களை எடுத்து கொடுக்கும் நுண்ணுயிர்கள் தொழு உரம் முழுவதுமாக பரவியிருக்கும். இவைகளை காற்று புகாமல் வெய்யில் படாமலும் மூடி வைக்க வேண்டும். நாங்கள் தினமும் கலக்கி  விட்டு, கூலிக்கு அதிகம் செலவு செய்து விட்டோம். இவைகளை நிலத்தில் இடும்  வரை  ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

8 Acre நிலப்பரப்பிற்கு  தொழு உரத்துடன் கலக்கப்பட்ட உயிர்  உரங்கள் 
அசோஸ்பைரில்லம் (Azospirillum 12 KG)
ரைசோபையம்  (Rhizobium 5 KG )
போஸ்போபாக்டீரியா (Phospo bacteria 5 )
சுடோநமாஸ் (  Pseudomonas 5 KG) 
டிரைக்கோடெர்மா விரிடி (Trichoderma viridi 5 KG) 
பொட்டாஷ் மொபிழைசெர் (Potash Mobilizer 3 KG)
Vesicular-arbuscular mycorrhiza (VAM) - 40 KG.

அசோலா 
அசோலா என்ற நைட்ரஜன் கொடுக்கும் பாசி இனம், இதை வளர்த்து நெல் வயல்களில் தூவி விடலாம். இது நெல் வயலில் நிற்கும் நீரில் படர்ந்து வயல்கள் முழுக்க படர்ந்து விடும், இதையும் தாயார் செய்து வைத்திருந்தோம்.நெல் வயல்களில் தண்ணீர் நிற்க துவங்கியதும் நெல் வயல்களில் தூவி விடலாம்.




நெல் நாற்றங்கால் 

பொதுவாக 20 முதல் 30 நாட்கள் வயதான  நெல் பயிர்களை நெல் நாற்றங்காலில் இருந்து எடுத்து நடவு செய்வார்கள்.

15 நாட்கள் வயதான இளம் நெல் நாற்றை நாற்றங்காலில் இருந்து எடுத்து நடவு செய்யும் பொழுது, அதிகம்  தூர் பிடிக்கும் (சில இடங்களில்  தூர் கட்டுதல், அதிக  சிமிர் அல்லது களப்பு   கட்டுதல் என்று சொல்வார்கள்). 

மேட்டு பாத்தி முறை  
15 நாட்களில் நாற்றின்  வளர்ச்சியயை அதிக படுத்த வேண்டும். இல்லை என்றால் நடவு செய்த பிறகு சிறிய நாற்று நீரில் மூழ்கி  அழுகி போக வாய்ப்புள்ளது. மேட்டுபாத்தி முறை வளர்ச்சியை வேகப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். 



இந்த முறையில் , நாற்று வளர்க்கும் பொழுது சற்று கவனம் தேவை.  நாங்கள் 15 நாட்களில் நடவு செய்ய முடிவு செய்த பொழுது, எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. இருந்தாலும் நடவு செய்ய முடிவு செய்தோம்.





25 சதவிகித நாற்றுக்களே எதிர்பார்த்த வளர்ச்சியை அடைந்திருந்தது.  15 நாட்களில் ஒரு   அடி   உயரம் அளவிற்கு நாற்று வளருமாறு  பராமரிப்பது முக்கியமானது .




 நாற்று நடவு 

நடவு வயலை தயார் செய்யும் பொழுது, நில பரப்பு சமமாக இருப்பது முக்கியம். ஒரே அளவு சமமாக  தண்ணீர் நிற்கும் அளவுக்கு உழவு வேலை செய்ய டிராக்டர் ஓட்டுபவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் சிறிய நாற்றுகள் தண்ணீரில் மூழ்கி அழுகி விடுமோ என்ற பயத்தை ஆரம்பித்திலேயே கொடுத்தது. 



நெல் பயிர் நாள் 1-5 
நாற்று நடவு செய்யும் பொழுது , வேர் மட்டும் மண்ணில் மூடும் அளவிற்கே பயிர்களை நட வேண்டும்.   நாற்று நட்ட பிறகு சில வயல்களில்  நாற்றுகள்  முக்கால்வாசி உயரத்திற்கு   நீரில் மூழ்கி இருந்தது. நாற்று அதிக ஆழத்தில்  நடப்பட்டதால் 50 சதவிகித நாற்றுகள் , நாற்றின் பாதி அளவிற்கு   மண்ணுக்குள் இருந்தது. இது ஒரு இருக்கமான மண நிலையையே கொடுத்தது. நாற்றை வளர்ப்பதற்கு அத்தனை உழைப்பு     செய்திருந்தோம்.  நாற்று நட்ட 2 நாட்கள் கழித்த பிறகுதான் தண்ணீர் விடவேண்டும்.


நெல் பயிர் நாள் 5-10
காய்ச்சல் பாய்ச்சல் என்ற முறையில் நீர் பாய்ச்ச வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அதாவது அதாவது முதல் 30 நாட்கள்  தொடர்ச்சியாக வயலில் நீர்  தங்கி இருக்க  கூடாது.
7ஆம் நாள் பார்த்த பொழுது, நிலம் விரிசல் விடும் அளவிற்கு காய்ந்திருந்தது,  அதை பார்த்த பொழுது நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. பக்கத்து வயல்களில் எல்லாம் பசுமையாக இருந்தது. வள்ளலார் சொன்ன வார்த்தை வாடிய பயிரை கண்ட  போதெல்லாம் வாடினேன், என்பதை அனுபவித்தால்  தான் உணர முடியும் .


வயல்களின் சில இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி இருந்தது,காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போல வயல் பரப்பு சமமாக இல்லை. நாற்று அழுகும் நிலையில் இருந்தது. கனத்த இதயத்துடன் சுற்றி பார்த்து  வந்தோம். 




நெல் பயிர் 11 மற்றும் 13ஆம் நாள்  
பயிர் கொஞ்சம் பச்சை பிடித்திருந்தது, புதிய இழைகள் துளிர்விடுவது போல் தெரிந்தது. மனதுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்தது. தண்ணீர் அதிகம் இருந்த இடங்களில் சில நாற்றுகள்  அழுகியும் இருந்தது.  



மீன் அமிலம் அடித்தால் சிறிது வளர்ச்சியை துரித படுத்தும் என்பதால், 1 லிட்டருக்கு 15ML மீன் அமிலம் என்ற வகையில் கலந்து ஸ்பிரேயர் மூலம் ஏக்கருக்கு 7 டேங்க் என்ற வகையில் தெளித்தோம்.
15ஆம் நாளில் இருந்து ஜீவாமிர்தம் கொடுக்க தொடங்கினோம், 200 லிட்டர் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு என்ற வகையில் நீர் பாய்ச்சும் போது நீரில் கலந்து விட்டோம். 


நெல் பயிர் 19 மற்றும் 20ஆம் நாள்
இப்பொழுதுதான் ஒரு அளவிற்கு  வயல் பசுமையாக தெரிந்தது, நெல் பயிர்கள் நன்கு பச்சை பிடித்திருந்தது.  கொஞ்சம் மணதிற்கு  தைரியத்தையும் நம்பிக்கையும் கொடுத்தது.
ஊட்டம் ஏற்றிய தொழு உரம் வயல்களுக்கு மூன்றாம் முறையாக ஒரு ஏக்கருக்கு  சுமார் 100 கிலோ இறைத்தோம்.  ஏற்கனவே சொன்னது போல, மண்ணில் சற்று சத்துக்கள் குறைவாக இருந்ததால் 100கிலோ தேவைப்பட்டது. இப்பொழுது பக்கத்து வயல் உறவினர்களிடம் தலை நிமிர்ந்து பேச முடிந்தது. 


இந்த காலகட்டத்தில் களைகளை கட்டுப்படுத்த, கோனோ வீடர்(Cono Weeder) போட்டு உருட்டலாம் என்ற எண்ணமும் தோன்றியது, ஏனென்றால் இதற்கு முன்பு பயிர் வளர்ச்சி குறைவாக இருந்தது என்பதால், கோனோ வீடர் போட்டால் பயிர் அடி படும் என்ற பயம் இருந்தது.


கோனோ வீடர் வேலை ஆட்களுக்கு புதியது என்பதால், அவர்கள் பழகுவுதற்கு கொஞ்சம் நாள் பிடித்தது. முதல் நாள் முயற்சி செய்து விட்டு,  முடியாது என்று விட்டு விட்டனர், எங்களுக்கு அடுத்து போராட்டம் தொடங்கியது இவர்களுடன்.  ஒருவர் மட்டும் முயற்சி செய்து பழகி கொண்டார், மற்றவர்களும் இவரை தொடர்ந்து செய்ய தொடங்கினர். 5.5 Acre கோனோ வீடர் போட்டு உழவு செய்ய 15 நாட்கள் ஆகியது 3 வேலை ஆட்களுடன்.

20ஆம் நாள்  , ஜீவாமிர்தம் 1/2 லிட்டர் அளவுக்கும், மற்றும்  100ML வேப்பண்ணை   10 லிட்டர்  நீரில்  கலந்து ஸ்பிரேயர் மூலம் தெளித்தோம். ஏக்கருக்கு 8 டேங் பிடித்தது.

நெல் பயிர் 25 மற்றும் 30ஆம் நாள்.
இப்பொழுது தூரில்  அதிகமாக பயிர்கள் பிடிப்பது தெரிந்தது, பயிர்கள் கொத்தாக காணப்பட்டது, வயல்கள்  சற்று அதிக பசுமையுடணும் பார்வைக்கு தெரிந்தது.



கோனோ வீடர் போட்ட பிறகும் சில இடங்களில் தக்கை பூண்டு செடிகள் முளைத்திருந்தது. இதை பற்றி பெரியதாக நாங்கள் எடுத்துக்கொள்ள வில்லை, இதுவும் உரமாகும் என்பதால்.  




நெல் பயிர் 35 மற்றும் 40ஆம் நாள் 

35ஆம் நாள் வளர்ச்சியை , சில இயற்கை விவசாயிகளிடம் காட்டிய பொழுது,  வெவ்வேறான  கருத்துக்களை சொன்னார்கள். ஒருவர் பரவாயில்லை நன்றாக தூர் பிடித்துள்ளது(Tillers) என்றார். மற்றொரு நண்பர் இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை , ரசாயண உரக்கடையில் கிடைக்கும்  Sulphate மற்றும் Phosphate இரண்டு  உரங்களையும் போடுங்கள் என்றார், அந்த இரண்டும்  பாறைகளில் இருந்து வருகிறது என்பது அவருடைய அனுபவம். எனக்கு அதில் உடன்பாடில்லை. 
    

சல்பேட் , பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் இயற்கையில் எப்படி கிடைக்கும் என்று தேட தொடங்கினோம்.  ராக் பாஸ்பேட் (Rock Phosphate) மற்றும்  புண்ணாக்கு  வகைகளில்  இருந்து (நைட்ரஜனும் சேர்ந்து) கிடைக்கும் என்று அறிந்தோம்.

ஏற்கனவே  இருந்த  ஊட்டம் ஏற்றிய   தொழு உரத்துடன், பாஸ்பேட்(Rock Phosphate), ஆமனுக்கு புண்ணாக்கு, எள் புண்ணாக்கு, இவற்றுடன் VAM Fungus மற்றும் பொட்டாஷ் நுண்ணுயிர் திரட்டி(POTASH  MOBILZER ) ஆகியவைகளை  கலந்து வைத்தோம். அதனுடன்  வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து 7 நாட்கள் மூடிவைத்து (இதை புண்ணாக்கு ஊட்டம்
 என்று கூறினால் சரியானதாக இருக்கும்) 42ஆம் நாள் வயலில் இறைக்க பட்டது..  

நெல் பயிர் 45ந்து மற்றும் 50ஆம் நாள் 
40 ஆம் நாள் இரசாயண உரம் பயன்படுத்தியவர்களின் வயல்களில் நெல் நன்கு கரும் பச்சையாகவும், அடர்த்தியாகவும் நிலம் தெரியாமல் அளவிற்கு வளர்ந்து  மூடி இருந்தது. எங்கள் வயல் நெல் கிளி பச்சை கலரில் , நெற்பயிர்களுக்கு இடையில் நிலங்கள் இன்னும் வெளி பார்வைக்கு தெரிந்தது. இது  புதியதாக ஒரு பயத்தை தோற்றுவித்தது .


40ஆம் நாள் இறைத்த புண்ணாக்கு ஊட்டம் துணை நிற்கும் என்று   நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் யூரியா போன்ற இரசாயண உரங்கள் உடனடியாக கரும் பச்சை நிறத்தையும், துரித வளர்ச்சியையும்  கொடுக்கும். இயற்கை உரத்தில் உடனடியாக பயன்களை எதிர் பார்க்க முடியாது, 3-5 நாட்களுக்கு பிறகுதான் அதன் பயன் தெரியும்.

45-50ஆம் நாள் நெல் பயிரில் நல்ல வளர்ச்சி தெரிந்தது, இதற்கு புண்ணாக்கு ஊட்டம்  முக்கிய காரணம் என    நம்புகிறேன்.




நெல் பயிர் 55  மற்றும் 60ஆம் நாள்
55 மற்றும் 60ஆம் நாட்களுக்குள், இன்னுமொருமுறை புண்ணாக்கு ஊட்டம் கொடுப்பது என்று முடிவு செய்தோம். இது பூ பிடிக்கும் தருணத்தில்  நெல் பயிர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும்.  புண்ணாக்கு ஊட்டம் இறைத்த பொழுது சில இடங்களில் நெற்பயிர் பூக்கும் தருணத்தில் இருந்ததை பார்க்க முடிந்தது.

நெல் பயிர் 65ஆம் மற்றும் 70ம் நாள்
இந்த நாட்களில் பெரும்பாலான நெல் பயிர்கள் முழு வளர்ச்சியை எட்டி இருந்தது. சில இடங்களில் பூக்கள் வெளியில் தெரிந்தது. இந்த கால கட்டத்தில் 70ஆம் நாள்  1/2 லிட்டர் தேமோர் கரைசலை  10 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு 10 டேங்  என்ற வகையில் தெளித்தோம்.

75ஆம் - 80ஆம் நாள்

இந்த நாட்களில் பூக்கள் நெல் பயிர்களில் வேகமாக வெளிவர தொடங்கியதை பார்க்க முடிந்ததுநெல் பயிர்கள் கரும் பச்சை நிறத்திலும் தோன்றியது.  





முதலில் அங்கொன்றும் இங்கொன்றும் ஆகா இருந்த பூக்கள் , பெரும்பான்மையான பயிர்களில் வெளிவர தொடங்கியது. 80ஆம் நாள் திரும்பவும் 1/2 லிட்டர் தேமோர் கரைசலை  10 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு 12 டேங்  என்ற வகையில் தெளித்தோம்.


85ஆம் மற்றும் 90ஆம் நாள் 

இந்த காலத்தில் 95 சதவிகித பயிர்கள் பூக்கும் காலகட்டத்தை தாண்டி நெல் மணியில் பால்  பிடிக்க தொடங்கி இருந்தது. நெல் மணி தரமுள்ளதாக இருக்க தேமோர் கரைசல் மிக பயனுள்ளதாக இருக்கும்,



95ஆம் மற்றும் 100ஆம் நாள்.
இந்த காலகட்டத்தில் நெல் கதிரில் பாதிக்கு  மேல் நெல் மணிகள்  முற்றும் தருவாயில் இருந்தது, நெல்கள் மஞ்சள்  நிறமாக மாறிக்கொண்டு இருந்தது நெல் பயிர்களின் இலைகளும்  பழுக்க துவங்கியது.



நெல் கதிர்களின் முதிர்ச்சியால் பல இடங்களில் வரப்பு ஓரங்களில் நெல் பயிர் சாய்ந்து இருந்தது, அதை ஒதுக்கி விட்ட பிறகுதான் வரப்பில் சிரமமின்றி நடக்க முடிந்தது.




105 மற்றும் 110ஆம் நாள் 
இந்த கால கட்டத்தில்  நெல் கதிர்களில் முக்கால் வாசி நெல் மணிகள், பழுத்து இருந்தது. நெல் பயிரும் கதிரின் கணம்  தாங்காமல் சாய தொடங்கியது. நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட்டோம், பல இடங்களில் நெல் பயிர் சாய்ந்து இருந்தது. இன்னும் பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்  என்று தோன்றுகிறது.

மேல் உள்ள படங்கள் எல்லாம் ஆத்தூர் கிச்சலி சம்பா வகையை சார்ந்தது.

120ஆம் நாள் 
அறுவடை சமயம், நெல்லின் வயது நாற்றங்கால் முதல் அறுவடை வரை 135 நாள்கள்(15 நாள் நாற்றங்காலில் இருந்தது). Machine மூலமாக  அறுவடை செய்தோம்.  சாய்ந்திருந்த நெல் பகுதியில் சிறிது நெல் சேதாரமும், வைக்கோல் சேதாரமும் இருந்தது.

வயல்களில் இருந்து சில படங்கள் 

 கிச்சிலி சம்பா (Kichili Samba)




சோனா  மசூரி  (Sona Masoori )






























சீராக சம்பா 








மாப்பிளை சம்பா 






கருப்பு கவுனி 


நவரா (Navara)

சிரமங்களும் விமர்சனங்களும் 

இயற்க்கை முறை விவசாயத்திற்கு பாரம்பரிய ரகங்கள் உகந்ததாகும், மற்ற ரக நெல்வகைகளை  பயிர் செய்தால் அதிக உரமும் , நோய்களில் இருந்து பாதுகாக்க அதிக மருந்துகளும் தேவைப்படலாம். நாட்டு  கோழி வளர்ப்பதற்கும் ,பண்ணை கோழி வளர்ப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் தான் இங்கும்.


நண்பர் விக்னேஷ் மூலம் கிச்சலி சம்பா மற்றும் சொர்ண மசூரி வகை கிடைத்தது. இவர் செம்மண் பூமியில் பயிர் செய்து வந்தார், எங்களுடையதும் செம்மண் பூமி என்பதால் இந்த இரண்டு வகைகளையும் அதிக அளவில் பயிரிட முடிவு செய்தோம்.   

பயிர் இடைவெளி பொறுத்தவரை, நெல் வகை, மண்ணின் சத்து மற்றும் தன்மை ஆகியவற்றை வைத்து முடிவு செய்யுங்கள். சத்து குறைவான மண்ணாக இருந்தால் இடைவெளி குறைவாக நடுவது நல்லது.

நடவுக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பதிலும்  கவனம் தேவை. .நாற்று நடுவதற்கு குத்தகைக்கு விட்டதால், அவர்கள் வேகமாக நடவை முடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். நாற்றை அதிக ஆழத்தில் நடவேண்டாம் என்றால் சரி என்று சொல்வார்கள், ஆனால் தொடர்ந்து அதே மாதிரி செய்தார்கள். நாற்றுக்களை நடவு செய்யும் பொழுது, வேர் மட்டும் மண்ணுக்குள் இருக்கும் அளவிற்குதான் நாற்று நடவு இருக்க வேண்டும்.

நீர் மேலாண்மையும் மிக முக்கியம், நீர்பாய்ச்சுவரையே நம்பி இருக்க கூடாது.  வாரம் ஒரு முறையாவது வயல்களை பார்வையிட்டு வரவேண்டும்.

இயற்க்கை உரங்களை தேவைக்கு ஏற்ப  திட்டமிட்டு அதற்கு தகுந்தது போல்  தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். இயற்க்கை உரங்கள், இயற்க்கை மருந்துகள்  தயார் செய்வதில் சரியாக திட்டமிட்டு செயல் படவேண்டும், ஏனென்றால் அமிர்தக்கரைசலை தவிர மற்றவைகளை பெரும்பாலும் 24 மணி நேரத்தில் தயார் செய்ய முடியாது. 

நெல் விதை வாங்கும் பொழுது தரமான நெல்களை, தெரிந்த விவசாயிகளிடம் இருந்து வாங்குவது நல்லது .

பல நண்பர்களிடம் இருந்து அறிவுரை பெற்றாலும்,  பயிரின் வளர்ச்சி, மண்ணின் தன்மை , நீரின் தன்மை,   வேலையாட்கள் செலவு மற்றும்  சீதோசண நிலைக்கு ஏற்ப எதிலும் முடிவு செய்ய வேண்டும்.


முதன்முதலில் பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட முடிவு செய்தபொழுது.  பல்வேறு விமர்சனங்களை எதிர் கொள்ளவேண்டி இருந்தது, சில பேர் 8.5 acre அளவுக்கு இயற்க்கை விவசாயம் வேண்டாம், முதலில் கொஞ்சமாக செய்து பாருங்கள் என்றார்கள்.

வயலில் வேலை செய்பவர்கள் கூட விட்டுவைக்க வில்லை , இவர் என்ன வெளிநாட்டுக்காரர் போல இருக்கிறார்  அது தான் இப்படி செய்கிறாரோ   என்று கிண்டலடித்தார்கள். 

பக்கத்து வயல் சொந்தங்கள், ஒவ்வொரு நேரத்திலும் இரசாயண  உரம் போடவே அறிவுருத்தி  வந்தார்கள். 

ஒரு அடி இடைவெளியில் நாற்று நடவு செய்தபொழுது, இது என்னப்பா கொடி  மாதிரி படரவா போகுது, இவ்வளவு தூரம் விட்டு நடவு போடுகிறீர்கள் என்று  விமர்சனம் செய்தார்கள்.  

அதிக  இடைவெளி மற்றும் உயரம் குறைவான நாற்றுகளால் நடவிற்கு பிறகு வயல்கள் அதிக அளவில் வெறுமையாக தெரிந்தது , இதை பார்த்து என்ன நாற்றா நடவு செய்து உள்ளீர்கள் என்று நய்யாண்டி செய்தவர்களும் உண்டு.


நாற்றங்காலில் நெல் விதைக்க சென்ற பொழுது,  வழியில் பாம்பு  ஒன்றை பார்க்க நேர்ந்தது. வீட்டில் உள்ளவர்கள் 15 ஆம் நாள் மற்றும் 40ஆம் நாள்  நெல் வயலை பார்த்து  பொழுது அவர்களுக்கு திருப்தியாக இல்லை. பாம்பை பார்த்த பொழுதே, இயற்கை முறையை கைவிட்டு விட்டு , DAP , UREA, POTASH, PHOSPHATE, போன்ற இரசாயண உரங்களை பயன்படுத்த முடிவுசெய்து இருக்க வேண்டும். அப்பொழுதே சகுனம் சரியில்லை   என்றனர்.

எதிர்மறையான சொற்களையும், மற்றவர்களின் விமர்சனங்களையும்  தாங்கிக்கொள்ளும் பக்குவமும்  இருக்க வேண்டும்.

ஆனால்  இயற்கை நெல் விவசாயிகள் முயற்சியை பாராட்டி ஊக்கம் கொடுத்தார்கள்.    


நெல் வயல்களுக்கு இடையில் மழை  நீர் சேமிப்பு குட்டையில் மீன் வளர்ப்பு. 



சித்திரை மாதத்தில்  பெய்த  கன மழை , வழக்கத்துக்கு மாறானது. அதே மாதத்தில் இரண்டாம் முறை மழை பெய்த பொழுது,   வயலில் இருந்த 60x40x7 அடி   பரப்பு கொண்ட மழை நீர் சேமிப்பு குட்டை நிரம்பியிருந்தது. 




எப்படியும் 6 மாதங்களுக்கு நீர் பிரச்சினை இருக்காது என்பதால், பண்ணை குட்டையில் மீன் வளர்த்தால் என்ன என்று தோன்றியது. இதையும் செய்த பார்க்க முடிவு செய்தோம்.  பண்ணை குட்டையில் மீன் குஞ்சுகள் விட முடிவு செய்தோம். இதில் 300 ரோகு மீன் குஞ்சுகளை விட்டோம்.

8ஆம் மாதத்தில் மழை நீர் சேமிப்பு குட்டையில்,சில மீன்கள் 1.25 KG என்ற அளவிலும், சில வகை மீன்கள் 3 மாதத்தில் 4 மீன்கள் சேர்த்தால் 1KG  அளவிலும் வளர்ந்துள்ளது.







சில முக்கிய நபர்கள்: நான் நேரில் சந்தித்தவர்கள் மற்றும் போனில் தகவல்கள் கொடுத்து உதவியவர்கள் .

Chennai, Padur திரு ரங்கநாதன் அய்யா
இயற்க்கை விவசாயம் மற்றும் மழை நீர் சேமிப்பு ,அதில் மீன் வளர்ப்பு  பற்றிய   முதன் முதலாக  ஒரு புரிதலையும், ஆவலையும் நம்பிக்கையையும் அளித்தவர்  Chennai, Padur திரு ரங்கநாதன் அய்யா அவர்கள்.

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=deLGUyfnXkg

அய்யா திரு ராதாகிருஷ்ணன் அவர்கள். என் சந்தேங்களுக்கு சலிக்காமல் விளக்கம் அளித்தவர், நெல் வளர்ப்பில் அவ்வப்பொழுது ஆலோசனை வழங்கியவருமான விழுப்புரம் கந்தமானடி என்ற கிராமத்தை  சேர்ந்தவர்.

https://www.youtube.com/watch?v=8PvlQd7pPc8

திரு விக்னேஷ்.

நெருக்கடியான சூழ்நிலையில் எனக்கு   விதை நெல் ஏற்பாடு செய்த கொடுத்த வேலூரை சேர்ந்த நண்பர் திரு விக்னேஷ். மேலும்   அவ்வப்பொழுது போனில் தகவல்களை அளித்தவர்.

திரு லோகநாதன் 
மக்கள் TV ல் ஒளிபரப்பான ஊட்டம் ஏற்றிய தொழு உரம் பற்றிய இவருடைய காணொளி.
https://www.youtube.com/watch?v=PziZh2TazD8&list=PLiXUUh2PPWLzSaigIATIB2lCJH7Q5-qh3

சேலம் செந்தில் 
ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தயார் செய்வதை பற்றி  சில தகவல்களை கொடுத்தவர் http://agritech.tnau.ac.in/itk/traditional%20varieties.html


திரு சிவானந்தம் அய்யா 
இடுபொருள் மேலாண்மையில் முக்கிய தகவல் கொடுத்து உதவியவர்.

திரு சுரேஷ் குமார்
 திரு சுரேஷ் குமார் அவ்வப்பொழுது சந்தேங்கங்களுக்கு விளக்கம் கொடுக்க தயங்காதவர். இவரும் கிச்சலி சம்பா மற்றும் சொர்ண மசூரி நெல் பயிரிட்டிருந்தார்.

https://www.facebook.com/profile.php?id=100012305763740&ref=br_rs

திரு பிரிட்டோ ராஜ் அவர்களின் youtube காணொளிகள்
https://www.youtube.com/watch?v=8IRhnAajOWc

திரு ஆனந்த் 
உறவினர் , எங்களுக்கு மீன் குஞ்சு கிடைக்க உதவியவர் மற்றும் மீன் வளர்ப்பில் தகுந்த ஆலோசனைகளை வழங்கியவர்.

திரு எஸ்.திருக்குமரன் B .Sc (Agri) 
எங்களுடன் நெல் வளர்ச்சியை பார்த்துக்கொண்ட திரு  , S THIRUKUMARAN B.Sc.,(Agri) அவர்கள் எப்பொழுதும் மிகவும்  நேர்மறையான (Positive) எண்ணங்களுடனே  பதில் மற்றும் ஆலோசனைகளை கொடுப்பார், அதுவும் ஒரு வகையில் நம்பிக்கையும் தையிரியத்தை கொடுத்து வந்தது.


செங்காட்டு தோட்டம்.
பி.மேட்டுப்பாளையம், பவானி தாலுகா, ஈரோடு மாவட்டம்.
செல் :8300204083

Sengattu Thottam.
P.Mettupalayam, Bhavani Taluk, Erode District.
Cell:8300204083